சங்கத்தின் முதற்தலைவராகப் பொறுப்பேற்று முப்பதாண்டுகள் ஒப்பில்லாப் பணியாற்றியவர் செந்தமிழ்ப் புரலவர், தமிழவேள் த. வே. உமாமகேசுவரனார், தமிழவேள் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அரும் பணிகளுள் சிலவற்றைக் காண்போம்.
அன்றைய நாளில் தமிழும், சமஸ்கிருதமும் கலந்த மொழியே பேச்சு வழக்கில் இருந்தது. தூய தமிழில் பேசுதல் இழிவாக கருதப்பெற்ற காலம் அது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயராப் பணியின் காரணமாக தூய தமிழில் பேசும் பழக்கம் ஏற்பட்டது. இப்பேச்சுக்கு 'கரந்தை நடை' என்றே பெயரிடப்பெற்றது.
வடமொழியில் வழங்கிய ஸ்ரீமான். சீமாட்டி, விவாக சுபமூகூர்த்தப் பத்திரிகை போன்ற சொற்களுக்குப் பதிலாக தூய தமிழ்ச் சொற்களான திரு. திருமதி. திருமண அழைப்பிதழ் முதலிய சொற்களை அறிமுகப்படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
நீராடுங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப்படுத்திய பெருமை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே சாரும். பின்னாளில் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களால், இப்பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பெற்றது.
வடமொழி மட்டும் கற்பிக்கப்பட்டு வந்த திருவையாறு கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, அக்கல்லூரியின் பெயர் அரசர் கல்லூரியாக மாறியமைக்குக் காரணம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே ஆகும்.
தமிழ்மொழி தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குவது: இதை உயர்தனிச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
தமிழுக்குத் தனியே ஒரு பல்கலைக் கழகம் வேண்டுமென்று 1922 ஆம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய போது, அதனை எதிர்த்து 1937 ஆம் ஆண்டிலேயே முதற்குரல் கொடுத்தது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
தமிழவேள் உமாமகேசுவரனார் வட்டக் கழகத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், தொடங்கிய பள்ளிகளின் எண்ணிக்கை 170 ஆகும்.