வாழி பகலோன் வளரொளிசேர் ஞாலமெலாம்
ஆழி செலுத்துதமிழ் அன்னையே வாழியரோ
நங்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் நாள்நாளும்
அங்கம் தழைக்க அமைந்து
...கரந்தைக் கவியரசு
முதல், இடை, கடைச் சங்கங்களுக்குப் பிறகு அடுத்து தோன்றிய, நான்காவது தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கமாகும். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அடியொற்றி, தொண்டு, தமிழ், முன்னேற்றம் என்பதனையே தனது கொள்கையாக, இலட்சியமாகக் கொண்டு, 1911 ஆம் ஆண்டு, தூங்கும் தமிழ்குலத் தோள்களைத் தட்டித் துயிலெலுப்பத் தோன்றிய ஐந்தாவது தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். வானவிரிவைக் காணும் போதெல்லாம் உமா மகேச்சுரன் புகழே என் நினைவில்வரும் என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால், போற்றிப் புகழப் பெற்ற தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராக அமர்ந்து, ஆற்றியப் பணிகள் ஏராளம், ஏராளம்.
தமிழ் மொழி தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குவது. இதனை உயர்தனிச் செம்மொழி என அறிவிக்கவேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய அரசுக்கு அனுப்பிவைத்ததோடு, அதன் தொடர்பான கூட்டங்களையும் நடத்தி வந்தது கரந்தை தமிழ்ச் சங்கமாகும். இதே கருத்தினை வலியுறுத்தி கரந்தைத் தமிழ்ச் சங்கம் 20.7.2003ல் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. அதனைத் தொடர்ந்து கரந்தைத் தமிழ் சங்கத்தின் சார்பில் வியக்கத்தக்கப் பேரணி ஒன்றும் நடத்தப் பெற்றது. கடந்த 21.12.2003 அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கம் உயர் தனிச் செம்மொழி கோரிக்கை எழுச்சி மாநாடு ஒன்றினைச் சீருடனும், சிறப்புடனும் நடத்தியது. இம்மாநாட்டில் தமிழ்ச் சான்றோர்களும், துறவியரும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்குகொண்டனர். செம்மொழி கோரிக்கை வலியுறுத்தி நடத்தப் பெற்ற முதல் மாநாடு இதுவாகும்.
இதுமட்டுமல்லாமல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செம்மொழிக் கோரிக்கையினை வலியுறுத்தி ஒரு கோடிக் கையெழுத்து இயக்கம் ஒன்றும் தொடங்கப்பெற்றது. மிகக்குறுகிய காலத்திலேயே இலக்கினை நெருங்கி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் சாதனை படைத்தது. தற்சமயம் தமிழ் மொழியினைச் செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்துள்ளது. இது தமிழர்களுக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு.ச. இராமநாதன் அவர்களின் முயற்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.