செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் உமாமகேசுவரனார் வாழ்க்கை வரலாறு [1883-1941]
-
பிறந்த ஊர்:
- கரந்தை என்று இன்று எல்லோராலும் அழைக்கப்படும் (தஞ்சையைச் சார்ந்த) கருந்திட்டைக்குடி,
செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் உமாமகேசுவரனார் பிறந்த ஊராகும்
-
பெற்றோர் :
- தந்தையார் பெயர் திரு. வேம்பப்பிள்ளை தாயார் பெயர் திருவாட்டி காமாட்சியம்மையார்.
-
பிறந்த நாள் :
- திருவள்ளுவராண்டு ஆண்டு சித்திரைத் திங்கள் 26 ஆம் நாள் (7.5.1883)
-
குடும்ப வாழ்க்கை :
- திருச்சியில் வாழ்ந்த அரங்கசாமிப் பிள்ளை என்பவரின் மகளாகிய உலகநாயகிக்கும்.
உமாமகேசுவரனாருக்கும் திருமணம் நடைபெற்றது. பஞ்சாபிகேசன், மாணிக்கவாசகன், சிங்காரவேலு என்னும்
மூன்று ஆண் மக்கள் பிறந்தனார். சிங்காரவேலு பிறந்த நான்காவது திங்களில் உலகநாயகியர்
இவ்வுலகிலிருந்து மறைந்தார்.
-
பொது வாழ்க்கை:
- 1917-ஆம் ஆண்டில் தோன்றிய நீதிக் கட்சியில் குறிப்பிடத்தக்க ஒருவராகத் தமிழவேள் உமாமகேசுவரனார்
விளங்கனார். தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினராகவும் தஞ்சை வட்டக் கழகத் தலைவராகவும் இருந்த
உமாமகேசுவரனார் தம் பொறுப்பில் இருந்த எல்லா ஊர்களுக்கும் வேண்டிய வசதிகளை செய்தார். ஊர்களில்
துப்புரவுப் பணி, விளக்குகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் மற்றும் தேவையான வசதிகள் அனைத்தையும்
குறைவின்றிச் செய்தார்.ஐம்பது பள்ளிகளே இருந்த தஞ்சை வட்டத்தில் நூற்று எழுபது(170) பள்ளிகளை
ஏற்படுத்திப் பெருஞ் சாதனைப் புரிந்தார். தமிழ் மண்ணில் தமிழ் மனவளங்கொண்டு நடக்கும்
கல்லூரியில் தமிழுக்கு இடமில்லாத நிலைமை இருந்து வந்தது. உமாமகேசுவரனாரின் முயற்சியால்
அந்நிறுவனத்தில் தமிழ்க் கல்லூரி ஒன்றும் தொடங்கப்பெற்றது. அரசர் கல்லூரி ஒன்றும் தொடங்கப்
பெற்றது. அரசர் கல்லூரி என்று அழைக்கப்படும் அக்கல்லூரி இதுவரை பல்லாயிரக்கணக்கான புலவர்
பெருமக்களை உருவாக்கித் தந்துள்ளது.தஞ்சை மாவட்டக் கழகம், தஞ்சை வட்டக் கழகம் தஞ்சை மாவட்டக்
கல்விக் கழகம் முதலிய அமைப்புகள் வாயிலாகவும் தனிப்பட்ட முறையிலும், தமிழ் மாணவர்கள் கல்வியில்,
ஓங்கிச் சிறக்கத் தேவையான அனைத்தையும் செய்தார்.
-
சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் :
- கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்ற பின்னர் சங்கத்திற்குத்
தலைமை தாங்கத் தகுதியுளள்ளவர் ஒருவர் பற்றி அறிஞர் ஆராய்ந்தனர். ஆங்கிலத்துடன் அருந்தமிழையும்
அமைவுறக் கற்று நேர்மைக்கும். உண்மைக்கும் போராடும் பெருஞ்செயல் வீரர் உமாமகேசுவரனாரே சங்கத்
தலைவர் பொறுப்பிற்கு உரியவர் என அறிஞர் பலரும் ஒருமித்து முடிவு செய்தனர். அறிஞர்தம்
விருப்பத்துக்கிணங்கக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைமைப் பொறுப்பை உமாமகேசுவரனார்
ஏற்றுக்கொண்டார்.
-
சங்கமும் உமாமகேசுவரனாரும்
- சங்கம் நிறுவிய துங்கனாகிய இராதாகிருட்டினப்பிள்ளை சங்கத்தைத் தோற்றுவித்த ஏழாம் ஆண்டில்
காலமாகி விட்டார். சங்கம் தோன்றிய நாளிலிருந்து உமாமகேசுவரனார் இறக்கும் காலம் வரையிலும் சங்கத்
தலைவராக இருந்து தமிழ்ப் பணி ஆற்றினார். சங்கத்தின் வாழ்வும். உமாமகேசுவரனார் வாழ்வும் பிரிக்க
முடியாது இணைந்தே நின்றன.
-
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்:
-
'தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தானில்லை' என்னும் அவலநிலையை நீக்க வேண்டும் என்று
கரந்தைத் தமிழ்ச் சங்கம் உறுதி கொண்டது. தமிழ்நாடு முழுதும் குடத்துள் விளக்காயிருந்த புலவர்
பெருமக்களையெல்லாம் அழைத்து வந்து சொற்பொழிவாற்றச் செய்து, தமிழ் உலகத்திற்கு
அறமுகப்படுத்தியது. தமிழ்நாட்டுப் பெரும் புலவர்கள் அனைவரும் அடிக்கடி ஒன்று கூட வழி செய்தது.
தமிழில் பேசுவது குறைவு என்றும், வடமொழி கலந்து பேசுவதும் ஆங்கிலத்தில் பேசுவதும் பெருமை
என்றும் நினைத்துக் கொண்டு தமிழைத் தமிழர்களே புறக்கணித்த காலத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கம்
ஒரு பெரும் புரட்சியையே உண்டாக்கியது. இவ்வெழுச்சி மிக்க: பணியால் விவாக சுபமுகூர்த்தப்
பத்திரிக்கைகள் மறைந்து, திருமண அழைப்பு வந்தது. ஸ்ரீ, மகாராஜஸ்ரீ நீங்கி திரு, திருவாளர் ஆகிய
சொற்கள் வழக்கிற்கு வந்தன. பிரசங்கம், சொற்பொழிவு ஆயிற்று. அக்கிர சேனாதிபதி தலைவர் ஆனார்.
காரியதரிசி செயலாளர் ஆனார். பொக்கிஷதாரர் பொருளாளர் ஆனார். இது போன்ற எண்ணற்ற அழகுத் தமிழ்ச்
சொற்கள் உமாமகேசுவரனாரின் சீரிய தமிழ்ச் சங்கப் பணியால் வழக்கில் நடையாடத் தொடங்கின. எங்கும்
தமிழ், எதிலும் தமிழ் என்று இன்று அனைவரும் காண விழையும் தமிழ் வளர்ச்சி தழைக்கக் கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக உமாமகேசுவரனார் அரும்பாடுபட்டார்.
-
தமிழ்ப்பொழில்
- தமிழ் மொழிப்பற்று, தமிழர் பண்பாடு, தனித்தமிழ் வளர்ச்சி, முதலிய சீரிய நோக்கங்களை நிறைவேற்றத்
திங்களிதழ் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உமாமகேசுவரனார் உள்ளத்தில் முகிழ்த்தது. இதன்
பயனாக 1925-26 இல் தமிழ்ப் பொழில் என்னும் திங்களிதழ் தொடங்கப்பெற்றது. அரிய தமிழாராய்ச்சிக்
கட்டுரைகள், ஆங்கில மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், கவிதைகள், தமிழ்க் கலைச் சொல்லாக்கம்,
வரலாற்றுக் கட்டுரைகள், மறுப்புக் கட்டுரைகள் முதலிய தமிழ்மொழி இன உணர்வூட்டும் பகுதிகளைத்
தாங்கி வெளிவரும் இவ்விதழ், இன்றும் அறிஞர்களின் கரங்களில் நின்று நிலவி வருகிறது.
-
சிறப்புப் பட்டங்கள் :
- "செந்தமிழ்ப் புரவலர்" "தமிழவேள்" "இராவ்சாகிப்" என்னும் பட்டம் அளித்து சிறப்பிக்கப்பெற்றவர்.
-
பண்பு நலன்கள் :
- தமிழவேள் அவர்கள் எல்லோரிடமும் மனம் திறந்து அன்புடன் பேசிப் பழகும் உயர் நெறியினர். ஆழமான
சைவப் பற்று மிக்கவர். எனினும் பிற சமயங்கள் பாலும் பெரு விருப்பினர். தம் கடமையையே கண்ணாகக்
கொண்டவர். மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களையும் மதித்துப் போற்றுபவர். பேச்சாற்றலும்
எழுத்தாற்றலும் மிக்கவர். பொதுத் தொண்டாற்றுவதையே தம் பொழுதுபோக்காய்க் கொண்டவர். தமிழையும்
தமிழர் நலனையுமே உயிர் மூச்சாய்க் கொண்டு உழைத்தவர்.
-
தமிழவேள் மறைவும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் :
- தமிழர் பண்பாடு, கலை, நாகரிகம், தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவற்றை ஆராய்ந்து தமிழ் வளர்ப்பதையே
பணியாக்க கொண்ட ஒரு மாபெரும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை தஞ்சை அல்லது திருச்சியில் தொடங்க
வேண்டுமென்று தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் 1925 ஆம் ஆண்டிலே பெரும் முயற்சி
மேற்கொண்டார்கள்.தாம் தோற்றுவித்த கரந்தைப் புலவர் கல்லூரியை வளர்த்துத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு. வடநாட்டிலுள்ள பல்கலைக்கழங்களையும் அவை தாய்மொழியைப் போற்றும்
வகையையும் கண்டறிந்து வரவிரும்பி வடநாட்டுச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டார்கள். அவ்வாறே பற்பல
இடங்களையம் பார்த்தறிந்தார்கள். இச்சமயத்தில் தீடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 1941 ஆம்
ஆண்டு மே திங்கள் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் சென்ற இடத்திலேயே தமிழவேள்
அவர்கள் இயற்கை எய்தினார்கள். செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் உமாமகேசுவரனார் தமிழுக்காகவே தம்
வாழ்வை ஒப்படைத்தவர்களாவர். அவர் காண விரும்பிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தமிழ்நாடு அரசு அவர்
விரும்பியவாறு தஞ்சையிலேயே அமைத்துத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறது. இப்பணி தமிழவேள்
அவர்களுக்குத் தமிழ்ச் சமுதாயம் காட்டும் நன்றிக் கடனாகவும் அமைந்துள்ளது.