Back to English Version

இலக்குகள்

கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளின் வாயிலாக அடைந்த இலக்குகள்:

பிறமொழிச் சொற்கள் கலவாத தூய தமிழ் நடையை சுரந்தைத் தமிழ்ச் சங்கம் அறிமுகப்படுத்தியமையால் தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாக நினைத்த நிலை மாறி தனித் தமிழில் பேசும் வழக்கம் மக்களிடையே ஏற்பட்டது. இப்பேச்சு வழக்கு "கரந்தை நடை" என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பெற்றது.

கரந்தைத் தமிழ்ச் சங்க விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப்பெற்று தொடர்ந்து சங்கத்தால் போற்றப்பெற்ற "நீராடும் கடலுடுத்த" என்ற மனோன்மணியம் சுந்தரனார் பாடல் தமிழக அரசால் தமிழ்த் தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் ஏற்றுக்கொள்ளப் பெற்றது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பணிகளுக்கு கிடைத்த நற்சான்றிதழாகும்.

திரு. திருவாளர், திருமதி. செல்வன், செல்வி, திருமண அழைப்பிதழ் முதலான சொற்கள் இன்று உலகத் தமிழர்களிடையே பரவலாக பயன்படுத்தப் பெறுவது கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

தஞ்சைத் தரணியிலேயே இன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்திருப்பது கரந்தைத் தமிழ்ச் சங்கம் 1925 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி என்று 1919-ஆம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றி அரசை வலியுறுத்தியதோடு மட்டுமின்றி, பேரணி நடத்தியும், ஒருநாள் மாநாடு நடத்தியும், ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தியும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமையை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். இந்நிலையில் நடுவண் அரசானது 12.10.2004 அன்று தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்துள்ளது கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலமாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போராடி வரும். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரனார் அவர்களின் திருஉரு தாங்கிய அஞ்சல் தலையினை நடுவண் அரசானது, கடந்த 18.02.2006 அன்று வெளியிட்டு சிறப்புச் செய்துள்ளது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அரும்பணிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

1995 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான "பரணர்" என்னும் நூலினை தமிழக முதல்வர் அவர்கள் தன் திருக்கரங்களால் வெளியிட்டமை. கரந்தைச் சங்கத்தின் நற்பணிகளுக்குக் கிடைத்த நற்சான்றாகும்.

1995 ஆம் ஆண்டு தஞ்சையில், நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது. "பன்னெடுங்காலமாக தமிழுக்குத் தொண்டு செய்து வரும்கரந்தைத் தமிழ் சங்கத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ரூபாய் 45 இலட்சம் நன்கொடை வழங்குகிறேன்" என்ற செம்மாந்த அறிவிப்பை வெளியிட்டு அவ்வண்ணமே வழங்கிய தமிழக முதல்வர் அவர்களால் பாராட்டப் பெற்றது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பணிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினைத் தமிழக அரசானது, அரசு விழாவாகக் கொண்டாடியது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அரும்பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.