முதல், இடை, கடைச் சங்கங்களுக்குப் பின் தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரைத் தமிழ்ச் சங்கமாகும். இச்சங்கம் பாண்டித்துரைத்தேவர் அவர்களின் அரும் முயற்சியின் பயனாய் 1901 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது.
இக்காலகட்டத்தில், தஞ்சாவூர், கரந்தையம் பதியில் வாழ்ந்தவர் திரு. த.வே. இராதாகிருட்டிணப் பிள்ளை மதுரையில் தமிழ்ச் சங்கம் தோன்றிய பின்னர். ஒவ்வோர் ஆண்டும். மதுரையில் நடைபெறும் ஆண்டு விழாவின் போது. அதே நாளில் தஞ்சையில் விழா கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திரு. த.வே. இராதாகிருட்டிணப் பிள்ளை அவர்களுக்கு, ஓர் எண்ணம் உதயமாகியது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவினை. தஞ்சையில் கொண்டாடுவதற்குப் பதிலாக, நாமே ஏன் ஒரு தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கக்கூடாது? என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 1911 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது ஐந்தாம் தமிழ்ச் சங்கமாகிய கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
கரந்தைத் தமிழச் சங்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தக் கூடிய ஒருவரைத் தேடியவருக்குத் தன் தமையனாரே, மிகவும் பொருத்தமானவராகத் தோன்றினார். எனவே, சிறந்த வழக்குரைஞரும், ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமைபெற்றவரும் ஆர்வமும் உடைய, தன்னுடைய தமையனாரை அணுகித் தலைமைப் பொறுப்பேற்க வேண்டினார். இவ்வாறாக சங்கத் தலைவராக தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் எந்தவித பதவியினையும் ஏற்காமல், அடிப்படை உறுப்பினராய் இருந்து பெருந்தொண்டாற்றியவர் திரு. த.வே. இராதாகிருட்டிணப் பிள்ளை அவர்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பெருமையினைப் பெற்றமையால், 'சங்கம் நிறுவிய துங்கன் திரு. த.வே. இராதாகிருட்டிணப் பிள்ளை என்றே அனைவராலும் இவர் அன்புடன் அழைக்கப் பெற்றார்.
இந்நிலையில் 27.2.1918 அன்று, சங்கம் நிறுவிய துங்கன் திரு. த.வே. இராதாகிருட்டிணப் பிள்ளை அவர்கள். தனது 33 ஆம் வயதிலேயே அகால மரணமடைந்து, அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்றார்.